எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக
அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி, பிரபலங்கள் சிலருடைய ட்விட்டர் பக்கத்திலும் போய் “வலிமை அப்டேட்” என்று பதிவிடத் தொடங்கினார்கள். உதாரணமாக, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மும்பையில் இருப்பதாகப் புகைப்படத்துடன் ட்வீட் செய்தார். அதற்கு “மும்பையில்தான் போனி கபூர் வீடு இருக்கிறது. அவரிடம் சென்று வலிமை அப்டேட் கேட்டுச் சொல்லுங்கள்” என்று பதில் அளித்தார்கள்.

தனது வெப்சைட்டை அறிமுகப்படுத்தியிருக்கும் யுவன் ஷங்கர்ராஜா அதில் வலிமை படத்தின் அப்டேட்டை செய்தியாக பதிவிட்டுள்ளார். வலிமை படத்தின் அஜித்தின் ஓபனிங் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரிசாவிலிருந்து பாரம்பரியமிக்க ட்ரம்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் பாடலில் பணிபுரிந்திருக்கிறார்கள். கொண்டாட்டமிக்க பாடலாக வந்திருக்கிறது என பதிவிட்டுள்ளார் .

வலிமை திரைப்படத்தின் மூலம் 8-வது முறையாக அஜித் – யுவன் கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில், பிரபல நாளிதழின் சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து பேசியுள்ளார். வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் இசையில் உருவாகி வரும் வலிமை இன்ட்ரோ சாங்கின் மேக்கிங் வீடியோ வெளியாகி தீயாய் பரவி வருகிறது. பாடல் அதிரடியான, ஒரு துள்ளலிசைப் பாடலாக, ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று யுவன் கூறியிருந்தார்.