சென்னை: தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகஅரசும் தளர்வுகளை வழங்கியதுடன், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல செயல்பட அனுமதி வழங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்தாக கூறியவர், சில மாவட்டங்களில் பரவல் அதிகரித்து வருவதாகவும், கோவை, தேனி, கிருஷ்ணகிரி உள்பட தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகமாக உள்ளது. தொற்று பரவலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள்,  மாஸ்க் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நோய் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பதில்லை என்று கூறியவர், தொற்று பரவலை கட்டுப்படுத்த எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், கொரோனா 3வது அலையின் பரவலின்போது, தொற்று பாதிப்பு குறைவுக்கு பலர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதே காரணம் என்று கூறியவர், தற்போது,  கொரோனா தொற்று  காரணமாக, படுக்கைகளில் 4 % மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.  கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும்  கூறினார்.