உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாவட்டம் இடா மாவட்டத்திலுள்ள லுகாரி தர்வாஜா, லௌகெரா கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷச் சாராயம் குடித்த ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிசிசை அளிக்கப்பட்டது.
விஷச்சாராயம் குடித்தவர்களில் 21 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இடா மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் தெரிவித்தார்.
விஷச்சாராய சாவு காரணமாக 11 அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இடா மாவட்ட கலால் துறை தலைமை அதிகாரி, கலால் துறை ஆய்வாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விஷச் சாராய சாவுக்கு காரணமான முக்கியக் குற்றவாளியான ஸ்ரீபால் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். விஷச்சாராய சாவுக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் அகிலேஷ் அறிவித்துள்ளார். மேலும், விஷச் சாராய விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.