டேராடூன்:
இமயமலையில் உள்ள பிரபலமான சிவன்கோவிலான கேதர்நாத் சிவன் கோவில் 6மாதத்திற்கு பிறகு மீண்டும் பக்தர்களின் வழிப்பாட்டுக்காக திறக்கப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்து உள்ளது கேதர்நாத் சிவன் கோவில். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதர்நாத் சிவனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவது வழக்கம். இந்த கோவில் குளிர்காலங்களில் சுமார் 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். தற்போது வெயில் காலம் என்பதால், கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 6 மாத காலம் கோவில் நடை திறந்திருக்கும்.
இதையொட்டி கோவில் நடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில்,வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலின் திறக்கப்பட்டது. அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார்நாத் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இரவு நேரங்களில் சுமார் 3000 பக்தர்கள் தங்கும் வகையில், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் அனல்பறக்கும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், கேதார்நாத் கோவில் வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது. இருந்தாலும் பபக்தர்கள் கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது.