சமோலி: உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 38 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 12 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை, கடந்த 7ம் தேதி உடைந்ததால் அலெக்நந்தா, தவுளிகங்கா ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதிகளின் கரையோரம் வாசித்த மக்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம் இடிபாடுகளால் மூடிக்கொள்ள அதில்  வேலைபார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில், இன்று ஒரே நாளில் 12 உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த உடல்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 154 பேரை பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணியில் 450க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.