லக்னோ:
பாஜக ஆட்சி செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லாக்டவுன் (ஊரடங்கு) காரணமாக உணவின்றி தவித்த தாய், தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறில், தனது 5 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், நிறுவங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில்,தினக்கூலி தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள் வேலையில்லாமல், ஒருவேளை உணவுக்கே அல்லாடி வருகின்றனர்.

இந்த நிலையில் யோகிஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலம் படோஹியில் உள்ள ஜஹாங்கிரபாத் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களான மிரிதுல் யாதவ் – மஞ்சு தம்பதிகள் தொழில் இன்றி உணவுக்கு திண்டாடும் சூழல் ஏற்பட்டது. இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணங்களும் போதுமான அளவு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று குழந்தைகள் பசியால் துடிக்க, வீட்டிலோ உணவு இல்லாத நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதனால், விரக்தி அடைந்த மஞ்சு, குழந்தைகளின் பசியைக்கூட போக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், தனது குழந்தைகளான, ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் ஆகியோரை அருகே உள்ள ஜஹாங்கிரபாத் காட் பகுதியில் ஓடும் கங்கை நதிக்கு அழைத்துச் சென்று, நவீன நல்லத்தங்களாக மாறி, ஒவ்வொருவராக நதியில் தூக்கி விசியுள்ளார். தொடர்ந்து, தானும் ஆற்றில் குதித்தவர் சிறிது நேரத்திலேயே நீந்தி கரைக்கு வந்துள்ளார்.
ஆத்திரம் தெளிந்தபிறகு, தான் செய்தது பெரிய பாவம் என்று எண்ணிய மஞ்சு, ஊருக்குள் ஓடிச்சென்று தனது குழந்தைகளை, ஆற்றில் வீசிவிட்டதாகவும், காப்பாற்றுங்கள் என்று அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தைகளின் உடலை தேடி வருகின்றனர்.
காவல்துறை, தீயணைப்புத்துறை மூத்த உயரதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக நீச்சல் தெரிந்த பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
குழந்தைகளை வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஊரடங்கால் போதிய உணவு இல்லாததால், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய எண்ணி, இந்த முடிவை எடுத்துள்ளது தெரிய வந்துள்து.
இந்த சம்பவம் 15-ம் நூற்றாண்டில் நடைபெற்ற நல்லத்தங்காள் கதையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. பசிக்கொடுமையால், தனது 7குழந்தைகளையும் பாழுங்கிணற்றில் தள்ளிக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]