லக்னோ:

உ.பி. வன உயிரின பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு எருமை இறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தாராசிங் சவுகாஜ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்களை முதல்வர் ஆதித்யாநாத் மூட உத்தரவிட்டதால் எருமை இறைச்சிக்கு ஏற்பட்டுள்ள பற்றாகுறை காரணமாக அம்மாநில வன உயிரின காப்பகங்களில் சிங்கம் உள்ளிட்ட மாமிசம் உண்ணும் விலங்கினங்கள் பாதிக்கப் பட்டுள்ளது.

‘‘ஈத்தவா சிங்க சவாரி பகுதியில் 3 ஜோடி சிங்கங்களும், 2 சிங்க குட்டிகளும் உள்ளன. தினமும் இந்த சிங்கங்களுக்கு 8 முதல் 10 கிலோ எருமை இறைச்சி வழங்கப்பட்டு வந்தது. எருமை இறைச்சி பற்றாகுறை காரணமாக இவைகளுக்கு கோழி இறைச்சி வழங்கப்பட்டது. ஆனால், அதை உண்ண விலங்குகள் மறுத்துவிட்டன. இதனால் வழக்கமான உணவு கிடைக்காததால் சிங்கங்கள் அமைதியற்று காணப்படுகின்றன.

கடந்த 2 நாட்களாக சிங்க ங்கள் தங்களது மாமிச உணவை உண்ணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. எருமை இறைச்சிக்கு பற்றாகுறை இல்லை. நாங்கள் தான் கொழுப்பு குறைவான ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை வழங்குவதாக’’ பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

லக்னோ வன உயிரின பூங்காவுக்கு தினமும் 235 கிலோ இறைச்சி தேவைப்படும். 47 மாமிச உண்ணிகள், 7 புலிகள், 8 சிங்கங்கள், 8 சிறுத்தைகள், 12 வன பூணைகள், 2 நரிகள், 2 ஓநாய்கள் இங்கு உள்ளன. மாட்டு இறைச்சி கூடங்கள் மூடப்படுவதால் சிகப்பு ரக இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கருப்பு மற்றும் வெள்ளை நிற இறைச்சி வழங்கப்படுகிறது.

அதன் இயக்குவர் அனுபம் குப்தா கூறுகையில், ‘‘எருமை இறைச்சி விநியோகம் போதுமானதாக இல்லை. அதனால் கோழி இறைச்சியும், ஆட்டு இறைச்சியும் வழங்கப்படுகிறது. விலங்குகள் இதை மறுக்கவில்லை. இது தற்காலிக ஏற்பாடு தான். விரைவில் சகஜ நிலை திரும்பும்’’ என்றார்.

‘‘சட்டவிரோத இறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால் இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளிலும், சந்தைகளிலும் போதுமான அளவில் இறைச்சி கொள்முதல் செய்ய முடியவில்லை. அவை அனைத்தும் மூடி கிடக்கிறது. இங்குள்ள கர்ப்பிணி சிங்கத்தை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது’’ என்று மூத்த கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ‘‘வன உயிரின காப்பங்களுக்கு தேவையான சிவப்பு ரக இறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உ.பி வனத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகாஜ் தெரிவித்தார். ‘‘சட்டப்படி அனுமதி பெற்ற எருமை இறைச்சி கூடங்களில் இருந்து அனைத்து வன உயிரின பூங்கா, ஈத்தவா சிங்க சபாரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த பிரச்னை மீது அரசு கவனம் செலுத்தும்’’ என்று அமைச்சர் தெரிவித்தார்.