லக்னோ: கொரோனா பாதித்த மாநிலம் என உத்தரபிரதேசம் மாநிலத்தை அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில், தேர்தலை தள்ளி வைக்கும் நாடகம் என விமர்சிக்கப் பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோ சனைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்ன தாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அங்கு 2022ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இதை யடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது.
இதற்கிடையில், கொரோனா தொற்றுடன் ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதால், உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டு தள்ளி வைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
அதைத்தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் நடைபெற உள்ள உ.பி. உள்பட 5 மாநிலங்களின் கொரோனா மற்றும் ஒமிக்ரான தாக்கம் குறித்த தரவுகளை பெற்றதாக கூறப்பட்டது. இருந்தாலும் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தவே தேர்தல் ஆணையம் நினைப்பதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, உ.பி. மாநிலம் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என அறிவித்து உள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், உத்தரப் பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அல்லது மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில், 2 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், தினசரி பாதிப்பும் 50க்கும் குறைவாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 1708965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1708965 பேரில் 1685761 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 22785 நோயாளிகள் இறந்துள்ளனர். தற்போது 419 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், இதைவிட அதிக கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களில், கொரோனா கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாட நிகழ்வுகள் எந்தவித தடங்கலுமின்றி நடைபெற்று வருகின்றன. ஆனால், குறைந்த பாதிப்பு உள்ள உ.பி. மாநிலம் கொரோனா பாதித்த மாநிலம் என, யோகி தலைமையிலான பாஜக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்ச் அல்லது மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, புதிய அரசு பதவி ஏற்க வேண்டிய சூழலில், மாநில அரசே, தங்களது மாநிலம் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலம் என்று கூறிக்கொண்டு, பொதுநிகழ்வுகள் நடத்த மார்ச் மாதம் வரை தடை போட்டுள்ள செயல் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற பயதிலேயே, சட்டமன்ற எதிர்கொள்ள தயங்கியே முதல்வர யோகி, உ.பி.யை கொரோனா பாதித்த மாநிலம் என பிரகடனம் படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.