பாட்னா:

இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை தாஜ்மகால் பிரதிபலிக்கவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முதலாக பீகார் மாநிலம் தர்பகங்கா நகருக்கு ஆதித்யாநாத் சென்றார். அங்கு பிரதமர் மோடியின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பேரணியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், ‘‘வெளிநாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு தாஜ்மகால், இதர நினைவு சின்னங்களின் மாதிரிகளை பரிசளிக்கும் முறையை கையாண்டு வருகிறோம். ஆனால், இவை எல்லாம் இந்தியாவின் கலாச்சாரங்களை பிரதிபலிப்பது கிடையாது.

பகவத் கீதை, ராமாயனம் போன்ற இதிகாசங்களை பரிசாக வழங்க வேண்டும். யாரும் சட்டம் ஒழுங்கை மீற எனது அரசு அனுமதிக்காது. அனைவரது பாதுகாப்புக்கும் அரசு உத்தவாதம் அளிக்கும். விதிகளை மீறுவோர் மீது சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘முத்தலாக்கு முறை குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாய் திறக்கவில்லை. நாட்டில் முஸ்லிம் பெண்களை பாதிக்கும் இந்த செயலுக்கு நீதித்துறை மூலம் தீர்வு காண வேண்டும். மதசார்பற்ற தலைவர்கள் ஏன் இந்தபிரச்னையில் அமைதியாக இருக்கிறார்கள்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் நிதிஷ்குமார் அமைத்துள்ள கூட்டணி பொறுத்தமற்றது. இயற்கையே இந்த கூட்டணியை ஏற்காது. இந்த கூட்டணியை அகற்ற தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படும். 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பீகாரில் பாஜ ஆட்சி அமைக்கும்’’ என்றார்.