இசான்பூர், குஜராத்
பயன்படுத்திய கார் விற்பனையில் உரிமையாளரை மோசடி செய்து மற்றொருவர் அந்த காரை விற்பனை செய்துள்ளார்.
இசான்பூரில் வசித்து வருபவர் தாக்கர். இவர் தனது பயன்படுத்திய காரை இணைய தளத்தின் மூலம் விற்க விளம்பரம் அளித்தார். அதை ஒட்டி தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகம் செய்துக் கொண்ட ஒருவர் வாங்க வந்துள்ளார். அவர் தாக்கரிடம் இந்த கார் குறித்த ஆவணங்களை சரி பார்ப்பதற்காக கேட்டுள்ளார்.
அவரை நம்பி தாக்கர் ஆவணங்களை அளித்துள்ளார். அந்த ராணுவ அதிகாரி என சொல்லிக் கொண்டவர் காரை வாங்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். அதன் பிறகு தாக்கருக்கு ராஜ் என்னும் பெயருடைய நபர் தனது காரை விற்பனை செய்ய விளம்பரம் அளித்தது தெரிய வந்துள்ளது.
அந்த பெயர் போலியானது என்றாலும் ஆவணங்கள் தாக்கருடையது என்பதால் இவருக்கு அந்த கார் குறித்து தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. அதன் பிறகு தனது கார் தனக்கே தெரியாமல் சந்து என்பவருக்கு ரூ.2.3 லட்சத்துக்கு விற்கப்பட்டதை கண்டு தாக்கர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த போலி நபர் தாக்கரின் கார் ஆவணங்களை காட்டி சந்து என்பவரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. தாக்கர் தனது காரை ரூ.4.7 லட்சத்துக்கு விளம்பரம் செய்த நிலையில் போலி நபர் அதே காரை ரூ.2.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து தாக்கர் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.