டில்லி: மார்ச் 1ம் தேதி முதல் ‘எச் – 1பி விசா’வுக்கு விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2023ம் நிதியாண்டிற்கான, ‘எச் – 1பி விசா’க்களை பெற விண்ணப்பிக்கலாம் என, அந்த நாட்டு குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முந்தைய அதிபர் டிரம்ப் ஆட்சியின்போது வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் எச்-1 பி விசாவில் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றன. அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். விசா தடையால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. பின்னர் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும், விசா தடைகள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், வரும் மார்ச் 1ந்தேதி முதல் எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியுறவுத்துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பான விபரங்கள் மார்ச் 31ம் தேதிக்குள், ‘ஆன்லைன்’ வாயிலாக தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேருக்கு புதிதாக எச் – 1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாவால் அதிகம் பயனடையும் மக்களாக இந்தியர்கள் உள்ளனர்.