வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சி & பட்டதாரி மாணாக்கர் என மொத்தம் 1000 பேரின் விசாவை ரத்து செய்துள்ளது அமெரிக்க அரசாங்கம். அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கேற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கையை அரசியல் விரோதம் மற்றும் இன பாகுபாடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும், மனித உரிமைக்கு எதிரானது என்றும் கண்டித்துள்ளது சீனா.
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளைத் திருடி, சீன ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு உதவும் வகையில், பல சீனர்கள் செயல்படுகிறார்கள். எனவே, அவர்களை அமெரிக்காவிற்குள் நுழைய விடக்கூடாது என்று கூறியிருந்தார் டிரம்ப். அதனையடுத்தே, தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அதிக ஆபத்துள்ள பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களில், குறைந்தளவுதான். அதேநேரத்தில், ராணுவ ஆதிக்கம் என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை விரும்பாத நேர்மையான மாணவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்று அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.