வாஷிங்டன்: ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் 76 செளதி அரேபியர்களுக்கு, விசாவை தடைசெய்துள்ளது அமெரிக்காவின் புதிய அரசு.
அதேசமயம், இந்தக் கொலை வழக்கில், தலையாய காரணகர்த்தாவாக கருதப்படும் செளதி அரேபிய பட்டத்து முகமது பின் சல்மான், இந்த நடவடிக்கைக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜமால் கஷோகியின் கொடூர கொலையால் உலகம் மிரண்டது. இதனால், அவரின் பெயரிலேயே விசா கட்டுப்பாட்டு கொள்கை அறிவிக்கப்பட்டது.
இந்தக் கொள்கையின் மூலமாக, அமெரிக்காவில் நுழைய முயலும் வெளிநாட்டு நபர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை உருவாக்க முடியும். அதாவது, அந்த நபர்கள் மோசமான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில், அரசின் சார்பாக ஈடுபட்டால், அவர்களுக்கான விசாவை தடுத்து வைக்க முடியும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.