தைவான் :
உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சாதகமாகவே செயல்படுகிறது, அதிக நிதியை எங்களிடம் இருந்து பெற்ற போதும் எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது, என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுபோலவே சீனாவின் பிடியில் இருந்து வெளியேற துடிக்கும் தீவு நாடான தைவானும் கூறி இருந்தது, தொடர் குற்றசாட்டுகளை கூறிவரும் தைவான், சீனாவில் இருக்கும் சிலரை கொண்டு தைவான் நாட்டவர்கள் என்ற பெயரில் உலக சுகாதார அமைப்பின் செயலாளர் டெட்ராஸ் மீது சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று, தைவான் கடற்பகுதியில் சீன விமானம் தாங்கி கப்பல்கள் நீண்ட தூர விமானங்களை ஈடுபடுத்தி போர் பயிற்சி மேற்கொண்டிருக்கிறது. கடந்த இரு மாதங்களில் இதுபோல் ஆறு முறை சீனா பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக தைவான் செய்திநிறுவனங்கள் கூறியது.
மேலும், இந்த கடற் பகுதியில் சீனா நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அமெரிக்க கடற்படையை சேர்ந்த 7வது படை பிரிவு போர்கப்பலான “பேரி” (Barry) சீனாவுக்கும் தைவான் தீவுக்கும் இடையில் உள்ள தைவான் ஜலசந்தியில் மிதந்து சென்றது, இது ஒரு சாதாரண நிகழ்வு என்று அமெரிக்கா கூறியபோதும். கடந்த மார்ச் 25 ம் தேதி சீனா இதேபோன்ற பயிற்சி செய்த போதும், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று அவ்வழியே சுற்றி வந்தது, “அமெரிக்கா ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுகிறது” என்று சீனா அப்போது குற்றம் சாட்டியிருந்தது.
அமெரிக்காவும் தனது நட்புநாடுகளுடன் சேர்ந்து இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் இது போன்ற பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் அதிகாரபூர்வமாக எந்தவிதமான நட்பும் இல்லாத போதும், சீனாவை தைவான் எதிர்த்து பேசிவரும் சூழ்நிலையில் இந்த பகுதியில் அரசியல் ஸ்திர தன்மையற்ற நிலையை ஏற்படுத்த நினைப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.