இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா 40 சதவீதம் குறைத்துள்ளது. அதே இந்தியர்களுக்கு விசா வழங்குவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ஈரான், சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. எனினும் தற்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க அமெரிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

டிரம்ப் பதவி ஏற்ற பிறகு 40 சதவீத பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் குடியேற்ற அனுமதி இல்லாத இந்தியர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் விசா வழங்குவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு 40 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானை சேர்ந்த குடியேற்ற அனுமதி தேவைப்படாத3 ஆயிரத்து 973 பேருக்கும், ஏப்ரலில் 3 ஆயிரத்து 925 பேருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது. இதே கடந்த ஒபாமா ஆட்சியில் 78 ஆயிரத்து 637 விசா வழங்கப்பட்டது. மாதந்தோறும் சராசரியாக 6 ஆயிரத்து 553 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் 74 ஆயிரத்து 150 பேருக்கு விசா வழங்கப்பட்டது. மாத சராசரி 6 ஆயிரத்து 179 ஆகும். கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு ஆண்டு வாரியாக மட்டுமே விசா வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களை அமெரிக்கா வெளியிட்டது. தற்போது மாதந்தோறும் புள்ளிவிபரங்களை வெளியிட்டு வருகிறது.

இது குறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘விசா தேவை என்பது சுழற்சி முறையிலானது. இது ஆண்டு தோறும் சீராக ஒரே மாதிரி இருக்கும் என்று கூற முடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கும். இதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச பிரச்னைகள் கூட காரணமாக இருக்கும். கோடை மற்றும் குளிர்கால விடுமுறை போன்ற சீசன் நேரங்களில் விசா வழங்கல் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றார்.

இதே இந்தியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் 97 ஆயிரத்து 925 பேருக்கும், ஏப்ரில் 87 ஆயிரத்து 49 பேருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டில் மாதந்தோறும் சராசரியாக 72 ஆயிரத்து 82 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் கடந்த ஆண்டில் 8 லட்சத்து 64ஆயிரத்து 987 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடுகளில் விசா வழங்குவது குறைக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு மட்டும் கிடையாது. 50 முஸ்லிம் நாடுகளுக்கு கட்நத ஏப்ரலில் விசா வழங்குவது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் சராசரியாக 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தடை விதித்த 8நாடுகளுக்கு குடியேற்ற அனுமதி தேவைப்படாதவர்களுக்கு விசா வழங்குவது 55 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விசா வழங்குவது குறைந்திருப்பதற்கு கூடுதல் பரிசீலனை தான் காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.