வாஷிங்டன்:

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின்  பயன்பாட்டுக்காக, ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் 777 இஆர் ரக 2 போயிங் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியாவில் தற்போது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு நிறைந்த ஏர் இந்தியா விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் 2 போயிங் 777 இஆர் ரக விமானங்களை வாங்க அமெரிக்காவை இந்தியா அணுகியது.
இதே ரக விமானத்தை அமெரிக்க அதிபர் தற்போது பயன்படுத்திவருகிறார்.

நவீன மற்றும் மேன்மைபடுத்தப்பட்ட இந்த விமானத்தில் லேசர் டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய அளவிலான எதிர்வினையாற்றும் அகச்சிவப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதலை முன் கூட்டியே தெரிவிக்கும் சென்சார், 2 திருப்பித் தாக்கும் அமைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளது. ஏவுகணை அச்சுறுத்தலை பைலட்டுக்கு தெரிவிக்கும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக எதிர்தாக்குதலை நடத்தும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு விமானங்களும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படமாட்டாது.

777 இஆர் போயிங் விமானங்கள் இரண்டையும் 190 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.19 கோடி)இந்தியாவுக்கு விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இரு விமானங்களையும் இந்திய விமானப் படை விரைவில் பெற்றுக் கொள்ளும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.