வாஷிங்டன்:
ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் பிரச்சினைக்காக எஃப் 16 ரக விமானம் தவறாகப் பயன்படுத்தியதற்கான தகவல்களை தெரிவிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய எஃப்-16 ரக விமானத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியபின், அதன் பாகங்களை இந்தியா காட்சிப்படுத்தியது.
தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், எஃப் 16 விமானத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்கியது.
விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது.
இந்நிலையில், அமெரிக்க லெப்டினன்ட் கர்னல் கோனே ஃபால்கர் கூறும்போது, எல்லை தாண்டி இந்தியாவுடன் மோத எஃப் 16 ரக விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதன் மூலம் அமெரிக்காவுடன் செய்து கொண்ட, வெளிநாட்டு ராணுவ தளவாட ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதி நவீன ஆயுதங்கள் தயாரிப்பில் உலகிலேயே முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, அதனை வாங்கிய நாடுகள் விதியை மீறுகின்றனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தை பாகிஸ்தானுக்கு விற்கும் போது 12 நிபந்தனைகளை அமெரிக்கா விதித்திருக்கிறது.
அந்த வகையில் காஷ்மீர் பிரச்சினைக்கு எஃப் 16 ரக விமானத்தை பயன்படுத்தியது விதி மீறல் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, இது தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது.