அமெரிக்க அதிபர் தேர்தல் – ஓர் இந்தியனின் பார்வையில்

ராஜ்குமார் மாதவன்

 

நவம்பர் 3, 2020 அன்று தேர்தல் நடக்கவிருக்கும் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவை உலகமே  ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.

இது அதன் 59-வது அதிபர் தேர்தல் மட்டுமன்றி  கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிந்தைய உலக அரசியலின் போக்கை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தவிதத்தில் பார்த்தாலும் அமெரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நாடுகளில் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக செல்வாக்குமிக்க நாடாக சமீபகாலமாக இந்தியா இருக்கிறது.

கொரோனா தொற்றுநோய் உலகப் பொருளாதாரத்தை முற்றிலும் உச்சகட்ட குழப்பத்தில்  மூழ்கடித்திருக்கும் வேளையில், உடனடியாக இதனை சீர் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்   சீனா தன்னை முன்னிலை படுத்திக்கொள்கிறது.

தொற்றுநோயால் ஏற்பட்ட சேதங்களுக்கு யார்மீது குறை சொல்வது  என்று பெரும்பாலான நாடுகள் யோசித்துவருகின்றன.

சந்தேகத்திற்கு இடமின்றி, சீனாவை  குற்றவாளியாக அடையாளப் படுத்துகின்றனர், அதற்காக சீனா தனது திறனுக்கும் விருப்பத்திற்கும் எதிரான ஒரு மிகப் பெரிய விலையை கொடுக்கவேண்டியுள்ளது.

பிற நாடுகளுக்கு கடன் கொடுத்து அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் உலகின் பாதி நாடுகளை பொருளாதார ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் சீனா அடிமைப்படுத்தியுள்ளது.

இந்த நாடுகள் சீனாவின் பொருளாதார கட்டுப்பாட்டு சிக்கலில் இருந்து விடுபட  முயற்சிக்கின்றன, இது உலகை அதிகார அரசியலை மறுவரையறை செய்யும்.

பல்வேறு சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் அரங்கேறிவரும் நேரத்தில், இந்த தேர்தல் தேசிய மற்றும் உலக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் சுவாரஸ்யமான தேர்தலாக இருக்கப்போகிறது.

‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கையுடன் செயல்படும் அதிபர் டிரம்ப், இதனால் தனது நண்பர்களையும் எதிரிகளாக மாற்றியுள்ளார், ஆனால் அதற்காக அவர் கவலைப்பட்டவராக தெரியவில்லை.

அவரது நடைமுறைக்கேற்ற அதிகார அரசியல் இஸ்ரேலுக்கான மத்திய கிழக்கு நாடுகளின் கொள்கையை முற்றிலும் மாற்றிவிட்டது. இஸ்ரேலை தனிமைப்படுத்தும் வளைகுடா நாடுகளின் ராஜ்யபூர்வமான முடிவை அவர்  முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இது வளைகுடா பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பல புதிய வழிகளைத் திறந்துள்ளதோடு பல மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சவூதி அரேபியாவை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகளின் தலைவராக உருவெடுக்கும்  துருக்கியின் முயற்சியை முறியடித்து, இந்த பிராந்தியத்தின் அரசியல் கூட்டணிகளை முற்றிலும் மாற்றியுள்ளது.

பாகிஸ்தானுடனான தனது உறவை சவூதி அரேபியா துண்டிக்க நினைக்கும் நிலையில், வளைகுடா நாடுகளுடனான அதன் உறவு மேலும் சிக்கலில் உள்ளது. ஆப்கானிஸ்தான் போருக்குப் பின்னர் பாகிஸ்தான் அமெரிக்க நட்பை இழந்துவிட்டது, இப்போது துருக்கியுடன் கைகோர்த்திருப்பதால் முஸ்லீம் நாடுகளின் ஆதரவை அது இழந்துள்ளது.

மேலும், இது தற்போது சீனாவை நம்பியுள்ளது. ஆனால், சீனா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. இதனால், சீனாவுடனான இந்திய எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

பப்புவா நியூ கினியா போன்ற மிகச்சிறிய தீவு நாடு கூட சீனாவின் மோசமான வர்த்தகக் கொள்கையை  எதிர்த்து குரலெழுப்பி வருவதை உலக நாடுகளுக்கு அமெரிக்க  அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டுகிறார்.

அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்ந்தடுக்கப்பட்டால்  சீனாவை எதிர்த்து ஆக்ரோஷமாக மேலும் குரல் கொடுக்க அனுமதிக்கும்.

மாறாக, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் வெற்றி பெற்றால், குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கவும் சாதகமான அணுகுமுறையை தேர்ந்தடுக்கவும் நேரம் எடுக்கும், குறைந்தது ஒரு வருடமாவது தேவைப்படும்.

இது அமெரிக்காவிற்கு எதிரான கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்த சீனாவுக்கு உதவும்.

இந்தியா தனது சொந்த ராணுவ பலத்தால் தனது எல்லையை  இதுவரை பாதுகாத்துவருகிறது, அதிபர் டிரம்பின் ஆதரவு இருப்பதால் பதிலடி நடவடிக்கைகளுக்கு சீனா தயக்கம் காட்டி வருகிறது.

ஜோ பிடனுடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸின் இந்திய வம்சாவழி தொடர்பு இந்தியர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மிகவும் செல்வாக்குள்ள அமெரிக்க வாழ் இந்திய சமூகம் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவருகிறது.

கோவிட் -19 க்கு முன்னர் அதிபர் டிரம்பிற்கு அதிக ஆதரவு இருந்தது, இருப்பினும்  கோவிட் -19 க்கு பிந்தைய சூழ்நிலைகள் இதனை முற்றிலும் மாற்றிவிட்டன. செல்வாக்கு மிக்க ஆசிய-ஆபிரிக்க-அமெரிக்கர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும், தீவிர தேசப்பற்றாளர்கள் அதிபர் டிரம்பிற்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள்.

அமெரிக்க அரசியல் பிரிவினையில் சிக்கியுள்ளது. தேர்தல் கணிப்புகள் 5:8 என்ற விகிதாசாரத்தில் ஜோ பிடனுக்கு ஆதரவாக உள்ளது.

சீனாவுடன் பல்வேறு பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்பையும், கோவிட்-19 குறித்து சீனா மீதான நிலைப்பாட்டையும் மாற்றியமைக்க, ஜனநாயகக் கட்சியின் வெற்றி வழிவகுக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில், ஏற்கனவே  அதிபர் டிரம்ப் நிர்வாகம் முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளதால், அவரது கொள்கையை பின்பற்றியே தொடரக்கூடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்க ஆதரவு நிலையில் இருந்து விலகி அணிசாரா நிலைக்கு தள்ளுவதோடு, அமெரிக்கா இந்தியாவோடு முக்கிய பங்கு வகிக்காது என்று தோன்றுகிறது.

அதேபோல், அமெரிக்கா தனது உலக வல்லரசு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும், ஏனெனில் உலகளவில் அமெரிக்காவை விட பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சீனா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவகாசம் கிடைக்கும்.

மாறிவரும் உலக சூழலில் தன்னை ஆசிய செல்வாக்கு மிக்க சக்தியாக தக்கவைத்துக் கொள்ளவும்  உயரவும்  இந்தியா கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா ஆழமான உறவுகளை வளர்க்கும்.

பாகிஸ்தானுடனான அதன் எல்லை பதட்டங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடிவடையும், ஆனால் சீனாவுடனான பதட்டம் இருதரப்பில் ஒருவரின் கை  ஒங்கும் வரை தொடர்ந்து நீடிக்கும்.

தொற்றுநோய் பரவல் விவகாரம் சீனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருப்பதோடு, ஆஸ்திரேலியா மற்றும் டிரம்ப் முயற்சியால் உலகின் முக்கிய சக்திகளை சீன எதிர்ப்பு மனநிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.

சீனா புதிய நண்பர்களை தேட  வேண்டியிருக்கலாம், அதில் இந்தியாவும் ஒன்றாக மாறலாம். இந்தியா சீனாவின் நட்பு இருவருக்கும் மிகவும் பலனளிக்கும் விதத்தில் இருக்கும், மேலும் உலக வல்லரசு நிலையை எளிதில் எட்ட முடியும்.

இது நடப்பதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது, இரண்டுமே விவேகமான மற்றும் அபிவிருத்தி சார்ந்த பெரிய நாடுகளாக இருப்பதால், நிலைப்பாடு படிப்படியாக நகரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் உள்ளதால், இறுதி பிரச்சாரம் வாக்காளர்களிடையே  எந்தவொரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை, தற்போதுள்ள நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபராகும் கனவை ஜோ பிடன் கலைத்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

அப்படி நடந்தால் அது, உலக வல்லரசுகளின் அரசியல் போக்கு எப்படி இருக்கும், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்பது விவாதத்திற்குரியது.

சந்தேகத்திற்கு இடமின்றி,  இந்தியாவையும் சீனாவையும் உலகம் உற்றுநோக்குகிறது, இருநாடுகளும் தங்கள் மோதல்களை எப்படி புத்திசாலித்தனத்துடன் கையாளப்போகிறது, தேச நலனில் எவ்வாறு அக்கறை கட்டப்போகிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் அவிழ்க்கப்படாத இந்த முடிச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் என்ற நம்பிக்கையில் உலகமே  காத்திருக்கிறது.

– ராஜ்குமார் மாதவன்