அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை நேரடியாக எச்சரித்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2 முதல் நமது தயாரிப்புகள் மீது பரஸ்பர வரியை அதாவது ‘tit for tat tariff’ விதிக்கப்போவதாகவும் அறிவித்தார்.
“இந்தியா நம்மிடம் 100% ஆட்டோமொபைல் வரிகளை வசூலிக்கிறது, சீனா இரு மடங்கு வரிகளை வசூலிக்கிறது, தென் கொரியா நான்கு மடங்கு வரிகளை வசூலிக்கிறது. இது நட்பு மற்றும் எதிரி நாடுகள் என இருவரிடமிருந்தும் நடக்கிறது. இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு நியாயமானதாக இல்லை; இது ஒருபோதும் நடந்ததில்லை.
மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த மற்ற நாடுகளுக்கு எதிராக அதே ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டிய முறை நம் கையில் உள்ளது.
சராசரியாக, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா மற்றும் எண்ணற்ற பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக வரிகளை நம்மிடம் வசூலிக்கின்றன. அது முற்றிலும் நியாயமற்றது” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப் கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல நாடுகள் தங்கள் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு வரிகளை விதிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தன, மேலும் பொருட்களின் மீது வரிகளை விதிக்காமல் வர்த்தகத்தை பெரும்பாலும் சுதந்திரமாக வைத்திருந்தன.
அதாவது, இரண்டு நாடுகள் ஒன்றுக்கொன்று இறக்குமதி வரியை விதிக்கவில்லை என்றால், அந்தந்த குடிமக்கள் எந்தவொரு பொருளையும் ஒரே விலையில் பெறுவார்கள். அதிகபட்சமாக, பொருளின் டெலிவரி கட்டணத்தை மட்டுமே இதில் சேர்க்க முடியும்.
இருப்பினும், இந்த விதிகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்கே பொருந்தும், ஏனெனில் இந்த நாடுகள் ஏற்கனவே வலுவான பொருளாதாரங்களையும் தொழில்துறை திறன்களையும் கொண்டுள்ளன. வளரும் நாடுகளின் பொருளாதாரம் மெதுவாக வளர்ந்து வருவதாலும், அவற்றில் தொழில்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும், இறக்குமதி வரி விதிப்பதில் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று உலக வர்த்தக அமைப்பு (WTO) பரஸ்பர ஒப்புதலுடன் முடிவு செய்தது.
இந்தியா மற்றும் அமெரிக்கா விஷயத்திலும் இதே விதி பொருந்தும். 19 ஆம் நூற்றாண்டிலேயே அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக இருந்த நிலையில், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் பொருளாதார நிலை மேம்படத் தொடங்கியது.
அதனால்தான், வளர்ந்த நாடான அமெரிக்காவை விட, வளரும் நாடான இந்தியா அதிக இறக்குமதி வரியை வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு காரணம், இந்தக் கட்டணங்கள் மூலம், இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ளவும், அந்நியச் செலாவணி இருப்புக்களை வைக்கவும் முடியும்.
ஒரு அமெரிக்கர் இந்தியாவில் இருந்து ஒரு காரை இறக்குமதி செய்தால், அவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காருக்கு இறக்குமதி வரியுடன் சுமார் ரூ.12.5 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
மறுபுறம், ஒரு இந்தியர் அமெரிக்க காரை வாங்கினால், அதிக இறக்குமதி வரி காரணமாக அவர் ரூ.20 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
வெவ்வேறு நாடுகள் ஒருவருக்கொருவர் வெவ்வேறு வரிகளை விதிக்கின்றன, இது வர்த்தக சமநிலையை பராமரிக்கிறது. இதுவரை அத்தகைய ஏற்பாடு WTOவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் தங்கள் நாட்டிற்கு அதிக விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவிலான வரியை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க அரசின் கஜானா நிரப்பும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து அதிக தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அமெரிக்கா வாங்கியது, அதே நேரத்தில் இந்தியா அமெரிக்காவிலிருந்து குறைவான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்கியது.
இதன் காரணமாக, அமெரிக்க குடிமக்கள் அதிக பணம் செலவழித்தனர். அதே நேரத்தில், இந்திய குடிமக்களின் நாணயச் செலவு குறைவாகவே இருந்தது.
பரஸ்பர வரி விதிப்பு குறித்து கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிவரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், மதுபானங்கள் மற்றும் சில விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க இந்தியா ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேசியிருப்பதை அடுத்து வர்த்தகப் போரைத் தவிர்க்க இந்தியா மேலும் சில அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், வர்த்தகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க, இரு நாடுகளின் இறக்குமதி-ஏற்றுமதி இடைவெளியைக் குறைக்க, அமெரிக்காவிலிருந்து அதிக பாதுகாப்புப் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவது பற்றி இந்தியா பேசியுள்ளது.
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் இந்தியர்களுக்கு வருமான வரியில் இருந்து சலுகை அளிக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டு பொருட்களின் விற்பனை அதிகரித்து நாட்டின் GDP வேகமாக வளரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பு இந்தியாவில் அமெரிக்க பொருட்களின் விலை குறையவும் வருமான வரி விலக்கு பெற்றவர்கள் அமெரிக்க பொருட்களை வாங்கிக் குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.