ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் “முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ‘இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய’ ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ள நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில் இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காட்டிய அர்ப்பணிப்பு உணர்வை ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படுத்தாததை அடுத்து புடின் மீது டிரம்ப் விரக்தி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்தது, ஆனால் அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!”

“எந்த காரணமும் இல்லாமல்” உக்ரைனில் உள்ள நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அவர் (புடின்) தேவையில்லாமல் நிறைய பேரைக் கொல்கிறார், நான் வீரர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. எந்த காரணமும் இல்லாமல் உக்ரைனில் உள்ள நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.”

“அவர் உக்ரைனை முழுவதுமாக கைப்பற்ற நினைத்துள்ளார், ஆனால் அவர் அவ்வாறு செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்!” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

“அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் தனது நாட்டிற்காக எதையும் செய்யவில்லை, அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, எனக்கு அது பிடிக்கவில்லை, அதை நிறுத்துவது நல்லது” என்று டிரம்ப் கூறினார்.

தவிர, ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை “முற்றிலும்” பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.