அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை உள்ளது என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் கால்கள் வீக்கமாகவும் அவரது கைகளில் தோல் சுருக்கம் காணப்படுவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் சமீப நாட்களாக படங்களுடன் செய்தி வெளியிட்டன.

நியூ ஜெர்சியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட அதிபர் டிரம்பின் புகைப்படங்கள் அவருக்கு கணுக்காலில் குறிப்பிடத்தக்க வீக்கம் இருப்பதைக் காட்டியது.

இதையடுத்து “மிகுந்த எச்சரிக்கையின் காரணமாக” வெள்ளை மாளிகை மருத்துவப் பிரிவு அவரை “முழுமையாக மதிப்பீடு செய்ததாக” அதிபர் டிரம்பின் மருத்துவர் சீன் பார்பபெல்லா கூறினார்.

அதிபரின் கால்களில் லேசான வீக்கத்தைக் கவனித்த பின்னர் முழுமையான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆழமான நரம்பு இரத்த உறைவு அல்லது தமனி நோய் போன்ற மிகவும் கடுமையான நிலை இருப்பதற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை என்றும் கூறினார்.

மேலும், அவருக்கு ரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலை இருப்பதாகவும் இது நாள்பட்ட சிரை பற்றாக்குறை (chronic venous insufficiency) என்றும் தெரிவித்துள்ளார்.

தவிர, அதிபர் டிரம்ப் அடிக்கடி கைகுலுக்குவதாலும் இருதய நோய்க்காக ஆஸ்பிரின் பயன்படுத்துவதாலும் அவரது கைகளில் உள்ள தோலில் அரிப்பு ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.