நோவார்டிஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திய அமெரிக்கர் வசந்த் நரசிம்மன் உட்பட 17 உயர் மருந்து நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு அரிய மற்றும் நேரடி நடவடிக்கையாக, அமெரிக்காவில் விண்ணை முட்டும் மருந்து விலைகளைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

2025 ஜூலை 31ம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த கடிதத்தில், இந்த விலை குறைப்பு நடவடிக்கை செப்டம்பர் 29ம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலும் பிற வளர்ந்த நாடுகளிலும் விற்கப்படும் அதே விலைக்கு அமெரிக்காவிற்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனங்களின் இந்த சமநிலையற்ற விலைக் கொள்கை “மருந்து விலை நிர்ணய நடைமுறையை துஷ்பிரயோகம்” செய்வதாக உள்ளது என்று இந்த கடிதத்தை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டே குறிப்பிட்டார்.
மேலும், “நீண்ட காலமாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கர்கள் ஒரே உயிர்காக்கும் மருந்துகளுக்கு மூன்று மடங்கு அதிகமாக பணம் செலுத்தி வருகின்றனர். இந்த அநீதி இப்போது முடிவடைவதாக அதிபர் டிரம்ப் கூறுகிறார்.” என்று கரோலின் லீவிட்டே கூறினார்.
டாக்டர் வசந்த் நரசிம்மன் மற்றும் அவரது சகாக்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் நான்கு கட்டாய கோரிக்கைகள் உள்ளன: மெடிகெய்டுக்கு உலகளாவிய சமமான விலையை நீட்டித்தல், புதிய மருந்துகளுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்தல், வெளிநாட்டு லாபத்தை அமெரிக்க நோயாளிகளுக்கு திருப்பி விடுதல் மற்றும் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நேரடி நுகர்வோர் கொள்முதல்களை செயல்படுத்துதல்.
“உழைக்கும் வரகத்தைச் சேர்ந்த அமெரிக்க குடும்பங்கள் மீதான இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சுமை எனது நிர்வாகத்துடன் முடிவடைகிறது,” என்று டிரம்ப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் மருந்து வணிகம் செய்யும் ஒவ்வொரு உற்பத்தியாளரும் அடுத்த 60 நாட்களுக்குள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள டிரம்ப், மருந்து நிறுவனங்கள் இதற்கு இணங்கத் தவறினால், வெள்ளை மாளிகை “எங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.