வாஷிங்டன்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன் முதலாக தொலைபேசியில் பேசி உள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே வெகு நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது.  பொருளாதார நடைமுறைகளில் நியாயம் இன்றி இருப்பதாகவும், அறிவு சார் சொத்துக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை திருவுவதாகவும் சீனா மீது அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குறை கூறி வந்தார்.  அதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் தொடங்கி இரு நாடுகளும் வரி விதிப்பை அதிகப்படுத்தி உள்ளன.

அத்துடன் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த் தகவல்களைச் சீனா மறைத்ததால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக டிரம்ப் தெரிவித்தார்.  அதன் பிறகு இரு நாட்டு உறவுகளும் மேலும் மோசமானது.  அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.  புதிய அதிபரான ஜோ பைடன் சீனாவுடனான அமெரிக்க உறவில் மாற்றம் ஏற்படுத்துவாரா என்னும் கேள்வி உலக நாடுகளில் எழுந்தது.

நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாம் பதவி ஏற்றபிறகு முதல் முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார்.   இன்று சீனாவின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பைடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பேச்சில் சீன நாட்டின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள்,. ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்குதல், சின்ஜியாங் மக்கள் மீதான மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அதைத் தவிர கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் உலகளாவிய சுகாதாரத்துக்கு எழுந்துள்ள சவால்கள், பருவ நிலை மாற்றம்.  ஆயுதத் தடை குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளனர்.  இரு நாடுகளுக்கிடையே மோசமான விளைவுகளால் இரு தரப்பும் பேரழிவைச் சந்திக்கும் என  அமெரிக்காவைச் சீன அதிபர் எச்சரித்துள்ளதாகச் சீன தொலைக்காட்சி கூறி உள்ளது.

ஜோ பைடன் தனது டிவிட்டரில், தாம் அமெரிக்க மக்களுக்கு பலன் அளிக்கும் போது சீனாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகப் பதிவு இட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங் மனித உரிமை மீறல்கள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் க்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.  சீன விவகாரத்தில் வெளிப்படையான பேச்சு வார்த்தைகளை அமெரிக்கா விரும்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.