மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், ரூ.5,550 கோடியை முதலீடு செய்துள்ளது அமெரிக்காவின் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கேகேஆர்.
இதன்மூலம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 1.28% பங்குகள், கேகேஆர் நிறுவனத்தின் வசம் வரும். ரிலையன்ஸ் நிறுவனத்தில், கேகேஆர் நிறுவனம் செய்யும் இரண்டாவது முதலீடாகும் இது. இதற்கு முன்னர், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில், 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின், 2.32% பங்குகளைக் கையகப்படுத்தியது கேகேஆர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் ரீட்டெய்ல் வணிகத்தில் முதலீடு செய்யும், இரண்டாவது நிறுவனமாகும் கேகேஆர். இதற்கு முன், இந்த மாத ஆரம்பத்தில், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ் ரூ.7,500 கோடியை முதலீடு செய்து 1.75% பங்குகளை வாங்கியது.
கடந்த 1976ம் ஆண்டில் துவங்கப்பட்ட கேகேஆர் நிறுவனம், ரூ.16.43 லட்சம் கோடியை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ரூ.37,750 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான தனியார் பங்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளது.