வாஷிங்டன்:

லங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின்போது, சுமார் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை இராணுவத் தலைவர் சவேந்திர சில்வா  மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.  யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அவர்மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் கடந்ரத ஆண்டு ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்.

சவேந்திர சில்வா,  2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி. இவர் உள்நாட்டு போர் சமயத்தின்போது,  அப்பாவி தமிழர்கள்,  பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானபேர் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதைத்தொடர்ந்து, மனித உரிமை மீறல் தொடர்பாக  ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் இடம்பெற்றது.

இந்த நிலையில்,  இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் அமெரிக்கா உள்பட முக்கிய வெளி நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை எழுந்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதியாக  கோதபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தத் தடைகள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சஸ் ஹாரிசன்,

இலங்கையில் நடைபெற்ற  வெகுஜன குற்றங்களுக்கு  சில்வா பொறுப்பேற்க வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கம் இதுபோன்ற ஒருவருக்கு ராணுவ தலைமை பொறுப்பு கொடுத்துள்ளது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கண்டித்துள்ளார்.

மேலும், அவரது நியமனம்,  சர்வதேச சட்டத்திற்கு  அவமதிப்பு மற்றும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை  என்றும், போரின் கடைசி நாளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சரணடைந்தை பலர் கண்ட நிலையில், அவர்கள் ராணுவ காவலில் இருந்தபோது  காணாமல் போயுள்ளனர் – பல ஆண்டுகளாக என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வைத்திருக்கும் தாய்மார்கள் சாலையோரத்தில் வெயிலில் அமர்ந்திருக்கிறார்கள்.

“இது நீதி அல்ல. இது அவமானம். ” என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா இலங்கை ராணுவதளபதிக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.  இதுகுறித்து கூறிய,  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ,  “ போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நபர்களை பொறுப்பேற்க வைத்துள்ளது, மனித உரிமைகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், இலங்கை அரசு நாட்டின்  பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என  இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.