வாஷிங்டன்: அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலியாகினர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது உலகெங்கும் பரவி இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

கிட்டத்தட்ட அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்துள்ளது.  இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவில்  நிமிடத்திற்கு 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகையால் டிசம்பர் மாத மத்தியில் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்புகளால் 5 லட்சத்து 11 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.