ரவுண்ட்ஸ்பாய்:
அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை மிக உணர்ச்சிகரமாக இருந்தது என்றும், அந்த உரையால் சிலிர்த்துப்போன அமெரிக்க எம்.பிக்கள் 74 முறை உணர்ச்சிவசப்பட்டு கை தட்டினர் என்றும் (இதில் உட்கார்ந்து கை தட்டியது 66 முறை, எழுந்து நின்று கைதட்டியது 8 முறை என்ற புள்ளிவிவரக் கணக்கும் உண்டு!) ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
“எழுதி வைத்துப் படிக்கும் தலைவர்கள் பலர் உண்டு. ஆனால் மோடியின் உள்ளத்தில் இருந்து எழுந்து வந்த சொற்கள் அவை. அதனால்தா் அவரது பேச்சுக்கு அத்தனை வரவேற்பு” என்றும் பல ஊடகங்கள் சொல்கின்றன.
ஆனால் உண்மையில் அந்த உரையும் எழுதி வைத்துப் படித்ததுதான். அதாவது சிறு நோட்டில் குறிப்பு எழுதி மேசையில் மறைத்து வைத்து, வார்த்தைக்கு ஏற்ப குரல் உயர்த்தி உடல் மொழியை மாற்றி படிப்பதல்ல.. இது வேறு.
அதாவது மோடி உரையாற்றும் போது அவருக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய, “எழுத்துத் திரை” (டெலிபிராம்ப்ட்) வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் “வாசிக்க” வேண்டிய வார்த்தைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆனால் கூட்டத்தில் இருந்து பார்த்தால், மோடிக்கு முன்பு ஏதோ கண்ணாடி ஒன்று இருப்பதாக மட்டுமே தோன்றும். எழுத்துக்கள் மோடிக்கு மட்டுமே தெரியும்.
இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம்!
ஆக, மோடியும் வார்த்தைகளைப் படித்திருக்கிறார். அவ்வளவுதான்.
இதே யுக்தியை 2014 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டபோது இந்திய விண்வெளிக்கழகத்தில் ஆங்கில உரையாற்றியபோது முதன்முதலாக மோடி பயன்படுத்தினாராம்.
அப்போதிலிருந்து ஆங்கிலத்தில் உரையாற்றும்போது மோடி இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமா இதே (டெலி பிராம்ப்ட்) யுக்தியை பயன்படுத்தி ‘புகழ்’பெற்ற உரைகளை ஆற்றியிருக்கிறார். ஆகவே அமேசான் நிறுவனம் ‘ஒபாமா பிரசிடென்ஷியல் ஸ்பீச் டெலிபிராம்ப்டர்’ என்ற பெயரில் இந்த கருவியை விற்பனை செய்கிறது.
“என்னதான் தன் முன்னே எழுத்துக்கள் ஓடி, அதை படித்தாலும்… அதற்கு ஏற்படி குரல் மாடுலேசன், உடல் மொழி எல்லாவற்றையும் சிறப்பாக செய்கிறாரே மோடி” என்றும் அவரது ஆதரவாளர்கள் பாராட்டக்கூடும்.
என்னவோ போங்கப்பா!