போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியின இளைஞர்மீது, பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“என்னை தாக்கினாலோ, கடத்தினாலோ என்ன செய்வது? அரசாங்கம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஸ்மத் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின இளைஞர் முகத்தில் பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைரலானது நிலையில். பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட முதல்வர் சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை அழைத்து, அவருக்கு பாதபூஜை செய்து மன்னிப்பு கோரினார்.
இதற்கிடையில், காவல்துறை வாக்கு பதிவு செய்து, பாஜக பிரமுகரை கைது செய்ததுடன், அவரது வீட்டையும் இடித்து நொறுக்கியது. இதையடுத்து, பழங்குடியின நபர், பாஜக பிரமுகரை விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் தனது தவறை உணர்ந்து விட்டார் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், லோக்கல் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரான தஸ்மத் ராவத், “இப்போது என் வீட்டின் முன்பு காவல்துறையினர் உள்ளனர். இவர்கள் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருப்பார்கள். அவர்கள் இங்கிருந்து சென்றபிறகு, என்னை யாரும் தாக்கினாலோ, கடத்தினாலோ நான் என்ன செய்வது? அதனால், அரசாங்கம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், வீடு உடைத்து நொறுக்கப்பட்ட பாஜக நிர்வாகிக்கு, மனைவி, மூன்று வயது மகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். அவர்களுக்கு முறையான இருப்பிடம் இல்லை என்று கூறப்படுகிறது. “ஒருவர் செய்த தவறுக்கு அவரது மொத்த குடும்பத்தினரையும் ஏன் தண்டிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரவேஷ் தங்கியிருந்த வீடு, அவரது சொந்த வீடு கிடையாது. அவரது மனைவியின் பாட்டிக்கு சொந்தமானது. இதை எப்படி அரசு இடிக்க முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதால், பாதிக்கப்பட்ட நபரான தஸ்மத் ராவத் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.