டெல்லி:
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள ராணுவ படைப்பிரிவு முகாமில் அதிகாலை 4 மணி அளவில் பாகிஸ்தான் தீரிவாதிகள் திடீரென பயங்கர தாக்குதலை மேற்கொண்டனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக இந்திய ராணுவத்தினர் பயங்கர கோபத்துடன் உள்ளனர். காஷ்மீர் தீவிரவாதிகளை வேட்டையாட துடிப்புடன் இருக்கின்றனர். அவர்களை பொறுமையுடன் இருக்குமாறு ராணுவ டைரக்டர் ஜெனரல் அமைதிபடுத்தி உள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ரன்பீர் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நடந்து வரும் பயங்கரவாத சம்பவங்களை அணுகுவதில் இந்திய ராணுவம் பொறுமையை கடைபிடித்து வந்துள்ளது. அதே சமயத்தில், இத்தகைய அப்பட்டமான அத்து மீறல்களுக்கும், வன்முறைகளுக்கும் பதிலடி கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு இருக்கிறது.
எதிரிகளின் எத்தகைய செயல்களுக்கும் உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம். அதை தேர்வு செய்யும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. காஷ்மீரில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடனே இவை நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் தற்போதுவரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது எந்தவிதமான தாக்குதலையும் இந்திய ராணுவம் மேற்கொள்ளவில்லை. ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது உடனடி நடவடிக்கை எதுவும் இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:–
அவசரப்பட்டு, உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. முறையான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அனைத்து வழிமுறைகளையும் ஆய்வு செய்வது, சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துகளையும் கேட்பது ஆகியவற்றுக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு 18 இந்திய வீரர்களை கொன்ற மணிப்பூர் பயங்கரவாதிகள் மீது கூட ஒரு வாரம் கடந்த பிறகுதான் தாக்குதல் நடத்தினோம். எனவே, இதிலும் அவசர நடவடிக்கை எதுவும் இருக்காது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.