சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை  நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்கு, பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 3  நாட்கள் மட்டுமே உள்ளன.  நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியினர்  தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தேர்தல் களத்தில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை  மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத, வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள், தனி நபர்கள் என அனைவரும் அந்தந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகள்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.