உறவுகள் – கவிதை பகுதி 2

போதிமரம்

பா. தேவிமயில் குமார்

 

 

உரமாக அன்று

உனக்கிருந்தேன்,

இன்றோ…

களர் நிலமாகக்

காட்சியளிக்கிறேன்

 

பாலும் தேனும்

பார்த்து, பார்த்து

ஊட்டி விட்டு

உனக்காகவே

வாழ்ந்ததெல்லாம்

வசந்த காலங்கள் !

 

உன்னைப் பற்றிய

நினைவிலே நான்,

என் நினைவென்பதே

இல்லாமல் நீ !

என்ன செய்வது ?

என் வயது வரும்போது

உனக்கும் புரியுமோ ?

 

நல்லவேளை உன் தாய்

நல்லபடியாய்

போய் விட்டாள் !

இல்லையென்றால்

இப்படி ஒரு மகனா ? என

இடிந்து போயிருப்பாள் !

 

நீ வசதியாய்

வாழ்ந்திட,

நான் அசதி

பார்க்காமல்

உழைத்த காலங்கள்

அன்று,

பரவாயில்லை,

நீ….

நன்றி மறக்கவில்லை,

வசதியான,

வளமான

முதியோர் இல்லத்தை இந்த

முதியவனுக்குக்

கொடுத்துள்ளாய் என்

குமரனே !

 

காருக்கு இடமும்,

காலணிக்கு இடமும்

அழுக்குப் பெட்டிக்கு இடமும்

அழகு பொம்மைக்கு

இடமும் வீட்டில்

ஒதுக்கிய மகனே,

உன் மனது பெரிதுதான் !

 

என்னை பத்திரமாக நீ

என்றும் பார்த்துக்கொள்ள

வேண்டாமடா !

வேண்டாத பாத்திரங்கள்

வைத்திடும் அறையிலாவது

ஒரு இடம் கொடுத்திடடா !

 

என்ன தான்

என்னை நீ

வெறுத்து

ஒதுக்கினாலும், உன்

நினைவுகள்

என்னை விட்டு

நீங்க மறுக்கிறதடா !

“பெத்த மனம்

பித்து” என்பது

புரிகிறது இப்போது !

 

ஏட்டுக் கல்வியை

எக்கச்சக்கமாய்

கொடுத்தேன் உனக்கு,

எதிர்கால வாழ்க்கை

எதிலென்று கேட்டாய்,

கல்வி மட்டுமே,

கரை சேர்க்குமென்றேன்

அன்று,

அப்போது கூட

அம்மா, அப்பாவை

அனுசரணையாக

கவனித்துக் கொள்வதே

கண்ணியமான வாழ்க்கை

என சொல்லவில்லையே

அதன் பலனை இன்று

அனுபவிக்கிறேன், மகனே !

 

ஓய்வூதியத்திற்காகவும், உன்

எதிர்காலத்திற்காகவும்,

ஓடி ஓடி உழைத்து விட்டு

இன்று ஓய்ந்து விட்டேனடா

இன்று ஓய்வில்லாமல்

ஓடுவது கவலைகள்தான்

 

என்னை நீ

ஒதுக்கி வைத்ததைப் பற்றி

எனக்குக் கவலையில்லை

ஊர் உன்னை தூற்றுமே !

உன்னைப் பார்த்து உன்

மகனும் கற்றுக் கொள்வான்

மகனே, எதிர் காலத்தில்

என் நிலை

உனக்கு வேண்டாமடா 

 

இங்கு பரிமாறப்படும்

உனக்குப் பிடித்த

உணவுகளை,

உண்ண மனம் வரவில்லை,

மகனே, வா

மகிழ்ச்சியோடு

ஒரு வாய்

ஊட்டுகிறேன்,

ஒரு முறை வருவாயா ?

 

காலையும்

மாலையும்

சாலையை மட்டுமே

சலிக்காமல்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

உன் பாதங்கள்

என் இடம் நோக்கி

வருமா ? என

 

முதியோர் இல்லங்கள்

என்ன போதி மரமா ?

இந்த வயதில் நான்

என்ன ஞானம் பெறவா

இங்கு வந்துள்ளேன் ?

 

மகனே, நீ என்னை

பார்க்க வரும்போது உன்

மகனை, அழைத்து வராதே ! அந்த

பட்டுக்குட்டிக்கு

உன்னைவிட

புத்தி அதிகம் !

எதிர்காலத்தில்

உன்னை, நிச்சயமாய்

எந்த முதியோர்

இல்லத்திற்கும்

அனுப்பவே மாட்டான்,

ஆனால்……

உனக்காகக் கட்டிக் கொடுப்பான்

“இதைவிட வசதியான முதியோர்

இல்லத்தை”

 

இப்படிக்கு

உன் பிரியமுள்ள

அப்பா