சென்னை: சட்டசபையில் அதிமுகவினரை பேச அனுமதிக்கவில்லை என கூறி சபாநாயகருக்கு எதிராக அதிமுக  கடும் அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து, சபாநாயகர் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றிய நிலையில், அவர்களை ஒருநாள் சஸ்பெண்டு உத்தரவிட்டார்.

தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்களள்  காலையில் வழக்கம் போல தொடங்கின. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.  இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக  அவையின் நேரமில்லா நேரத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில் பேசத் தொடங்கினார்.

அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகனும், சபாநாயகர் அப்பாவுவும், “நேரமில்லா நேரத்தில் பேச அரை மணி நேரத்திற்கு முன்பாகவே எந்தப் பொருள் குறித்து பேசப்போகிறோம் என்பதை அறிவிக்க வேண்டும். அதுதான் மரபு” எனத் தெரிவித்தார்கள்.

கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் இல்லையென்றால், அனுமதிக்க முடியது என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விதிமுறை, மரபை கடைபிடிக்கவில்லை என்றால், அவர்களை பேச அனுமதிக்காதீர்கள், அவர்கள் கேட்கும்

கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை,  கை நீட்டி பேசுவது மரபல்ல என்று கூறினார்.

இதனை தொடர்ந்தும் அ.தி.மு.க. உறுப்பினர்கள்  தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர் களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில், அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் ஒருநாள் முழுக்க சஸ்பெண்டு செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.