லகொண்டா

தாம் மத்திய அமைச்சராக இருந்த போது 11 முறை சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்த போதும் அது குறித்து வெளியில் தெரிவிக்கவில்லை என தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வரும் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி (டி ஆர் எஸ்)கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசில் கடந்த 2006 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக பணி புரிந்து வந்தார். அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலப் பிரிவுக்கு அரசு ஒப்புக் கொள்ளாததால் அவர் கூட்டணியில் இருந்து விலகி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சந்திரசேகர் ரான் நலகொண்டா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தில், “புல்வாமா தாக்குதலை அடுத்து பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி 300 ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகளை ஒரே தாக்குதலில் அழித்துள்ளதாக மோடி கூறி வருகிறார். ஆனால் ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசார் ஒரு எறும்பு கூட அழிக்கப்படவில்லை என கூறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி தனது ஆட்சியில் என்ன செய்தார் என மக்களுக்கு தெளிவான உண்மை தகவலை தெரியப்படுத்த வேண்டும். தேநீர்காரரார்க இருந்தவர் காவல்காரர் ஆகி உள்ளார். ஆனால் அவர் நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகள் குறித்து யாருக்கும் தெரியவில்லை. அடிக்கடி மோடி சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதை குறித்து சொல்லிக் கொள்கிறார்.

நான் மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் 11 முறை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி உள்ளோம். ஆனால் அதை குறித்து வெளியில் சொல்லவில்லை. சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை அழிப்பது அரசின் கடமைகளில் ஒன்று. அது குறித்து பெருமை அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. தற்போதும் எதிரிகளை அழிக்க போர் புரிய வேண்டும் எனில் நான் தயார். அதற்கு நீங்கள் எங்கள் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் எங்களுக்கு வாக்களித்து வெற்றியை அளிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.