உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் உள்ளிட்ட மேலும் 5 பேர் மீது வன்முறையைத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் முகலாயர் கால ஷாஹி ஜமா மசூதியில் நேற்று இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

தீ வைப்பு கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையை கட்டுப்படுத்த இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் சம்பல் மாவட்டத்திற்குள் வெளியாட்கள், சமூக அமைப்புக்கள் அல்லது பொதுப் பிரதிநிதிகள் நுழைவதைத் தடைசெய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தவிர, காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதனால் அம்மாவட்டத்தில் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலவிவருகிறது.

இந்த நிலையில் இந்த வன்முறை தொடர்பாக சம்பல் நாடாளுமன்ற உறுப்பினரும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான ஜியா உர் ரஹ்மான் பார்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.