டில்லி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் முதல்வராக பதவி வகிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தாலும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் முலாயம். அதோடு அரசிலும் மறைமுக செல்வாக்கை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அப்பா முலாயமின் ஆதரவாளர்கள் மீது அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுப்பதும், அகிலேஷின் ஆதரவாளர்கள் மீது முலாயம் சிங் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே முதலமைச்சரின் ஆதரவாளரான ராம்கோபால் யாதவை கட்சியை விட்டு நீக்கினார் முலாயம். இந்த ராம்கோபால் யாதவ், முலாயமின் தம்பி ஆவார்.
இந்த நிலையில் இதுகுறித்து ராம்கோபால் யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி தெரிவித்திருப்பதாவது:
” முலாயம் சிங் யாதவ் என்னுடைய மூத்த சகோதரர் மட்டும் அல்ல. அவர் எனது அரசியல் குரு. ஆனால் தற்போது தீய சக்திகள் அவரை சூழ்ந்துள்ளன. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருக்கும் வரை அவரை ஆதரிப்பேன். நான் சமாஜ்வாதி கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருக்கும் வரை அவரை ஆதரிப்பேன்.
ஜனநாயக நாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுவது குற்றச்செயல் அல்ல. என்னை கட்சியை விட்டு நீக்கியதால் நான் வருத்தம் அடையவில்லை. மாறாக என்மீதான குற்றச்சாட்டுக்களால் காயம் அடைந்துள்ளேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அப்பா முலாயமுக்கும், மகன் அகிலேஷூக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்திருப்பது அம்பலமாகியுள்ளது.