லக்னோ:
உ.பி. மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாவலர் வங்கிக்கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தனக்குத் தெரியாமல் யாரோ டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று அந்த பாதுகாவலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநில ஆளுங்கட்சி சமாஜ்வாதி பார்ட்டி. இக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் இர்பான் சோலங்கி. இவரின் பாதுகாவலர் குலாம் ஜிலானி. இவர் கான்பூர் மால் சாலையில் உள்ள உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் கணக்கு வைத்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு ஏ.டி.எம். மையத்தில் தனது கணக்கில் இருந்து 100 ரூபாய் எடுத்தார். அப்போது வந்த ரசீதில், மீதம் அவரது கணக்கில் .99,99,02,724 ரூபாய் இருப்பதாக வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக எம்.எல்.ஏ. சோலங்கிக்கு தகவல் அளித்தார். எம்.எல்.ஏ., உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கும்படி கூறினார். இதையடுத்து புகார், ஆட்சியருக்கு போனது.
ஆட்சியர், ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
தற்போது ஜிலாயின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.