லக்னோ
உத்திரப் பிரதேச அரசு ஆதரவற்று திரியும் பசுக்களின் பாதுகாபுக்காக 0.5% வரி விதித்துள்ளது.
பசுக்களை போற்றி வரும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை ஆதரவற்ற நிலையில் விடுவது அதிகரித்து வருகிறது. பால் கொடுக்கும் வரை வைத்திருந்து விட்டு அதன் பிறகு அடிமாடுகளாக பசுக்கள் விற்கப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் பசுக்களை கொல்ல சட்டப்படி தடை விதிக்கப்பட்டதால் பசுக்களை ஆதரவின்றி விடுவது அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. .
அவ்வகையில் ஆதரவின்றி விடப்பட்ட பசுக்கள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை மேய்ந்து விடுவதால் விவசாயிகள் அந்த பசுக்களை பள்ளிகளில் பூட்டி வைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதன் பிறகு அரசு அதிகாரிகள் அந்த பசுக்களை பசு பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது போல மாநிலத்தில் 3 இடங்களில் நிகழ்ந்துள்ளது.
இதை ஒட்டி ஆதரவற்ற பசுக்களை பராமரிப்பது குறித்து அதிகாரிஅக்ள் மற்றும் அமைச்சரவை கூட்டமொன்று நடந்தது. அதில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்க நிதி திரட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் இந்த பராமரிப்புக்காக 0.5% கூடுதல் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த கூடுதல் வரி மது பானங்கள் மீது விதிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டு அது இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதைத் தவிர சாலை போக்குவரத்து கட்டணங்களில் இருந்தும் 0.5% பசு பராமரிபுக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள்து. இது நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிக் கட்டணத்துக்கான வரியில் இருந்து பிடித்தம் செய்து பசு பராமரிப்புக்கு அளிக்கப் பட உள்ளது, இந்த பணத்தில் பசு பராமரிப்பு மையங்களை உடனடியாக அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பசு பராமரிப்பு மையம் அமைக்கப்பட்ட பிறகு பசுக்களை ஆதரவின்றி அனுப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு பிடிபடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அந்த பணத்தையும் பசு பராமரிப்புக்கு செலவிடப்பட உள்ளதாக ஒரு அரசு அலுவலர் தெரிவித்துள்ளார்.