
லக்னோ
உத்திரப் பிரதேச விவசாயி ஒருவரின் விவசாயக்கடன் ரூ. 1.5 லட்சத்தில் ரூ.10 தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது.
உ பி மாநிலத்தை ஆளும் பா ஜ க அரசு விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின்படி 87 லட்சம் விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். அத்துடன் இதற்கு ரூ.36000 கோடி வரை செலவாகும் எனவும் அரசு தெரிவித்தது.

அதன்படி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் என்னும் ஊரில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்னு கோரி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். அதை வாங்கிய விவசாயிகள் அதிர்ந்தனர். ரூ. 10, 5 என்றெல்லாம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலை புகைப்படம் எடுத்து சில ஊடகங்கள் வெளியிட்டன. அதில் குறைந்த பட்ச தள்ளுபடியாக 9 பைசா எனவும்அதிக பட்சமாக ரூ.377 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாந்திதேவி என்னும் உம்ரி கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு ரூ. 1.5 லட்சம் கடனில் ரூ.10.37 தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. ரூ. 40000 கடன் வாங்கியிருந்த முன்னிலால் என்பவருக்கு ரூ.215 தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. சிவபால் என்னும் விவசாயிக்கு ரூ.93000 கடனில் ரூ. 20271 தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இது குறித்து உடனடியாக அமைச்சரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். அமைச்சர் விதிமுறைகளின் படியே தள்ளுபடி செய்ததாகவும், அந்த சான்றிதழ்கள் பிரிண்ட் செய்யும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டிருக்கும் என சமாளித்து விட்டார்.
ஊடகங்களில் வெளியான தகவலை தொடர்ந்து பலரும் இந்த குழறுபடிகளை பற்றி தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிந்தனர். பத்திரிகையாளர்கள் இந்த டிவிட்டர் பதிவு பற்றி அமைச்சர் மன்னு கோரியிடம் கேட்டனர். அதற்கு அவர், “நானும் அந்தப் பதிவுகளை பார்த்தேன். ஏதும் தவறு நடந்திருப்பின் அதைப் பற்றி விசாரித்து உடனடியாக அதை சரி செய்வோம். மேலும் இந்த தவறுகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்.
[youtube-feed feed=1]