லக்னோ:

உ.பி. மாநில தலைநகர் லக்னோவில் உள்ள உ.பி. பல்கலைக்கழகத்திற்கள் நுழைய  மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக கேட் சங்கிலியில் பிணைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜ மாநில அரசு காதலர் தின  கொண்டாட்டத்துக்கு மறைமுகமாக  தடை விதித்துள்ளது.

இந்நிலையில் லக்னோ பல்கலைக்கழகத்தில் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், காதலர் தினத்தன்று மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியது.

மேலும், பல்கலைக்கழக  உத்தரவை மீறி வளாகத்திற்குள் யாராவது அமர்ந்திருந்தாலோ, அல்லது சுற்றி கொண்டிருந்தாலோ அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து, பெரும்பாலும் திறந்தே இருக்கும் லக்னோ பல்கலைக்கழகத்தின் வாயில் இன்று இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு பூட்டுப்போடப்பட்டது.