லக்னோ: உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யோகி தலைமையிலான பாஜக மாநில அரசின் இந்த கொடுஞ்செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகள்ள வந்த கபடி வீராங்கணைகளுக்கு உணவு வழங்கியது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கும் வகையில், பல்வேறு பாத்திரங்களில் இருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்வதும், அந்த கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள உணவுகளை அங்கு விளையாட வந்துள்ள சுமார் 200 வீராங்கணைகளுக்கு வழங்கிய காட்சிகளும் வெளியானது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய அனிமேஷ் சக்சேனா என்ற அதிகாரி, மழை பெய்ததால், நீச்சல் குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்தோம். நீச்சல் குளத்திற்குப் பக்கத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் உணவு வைக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மழையின் காரணமாக உணவை வைக்க வேறு இடம் தேவைப்பட்டது அதனால், “இட நெருக்கடி” காரணமாக உணவை கழிவறையில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.