லக்னோ:

உ.பி. இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக  16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட  37 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 43 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்துள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் உ.பி.யில்  நடைபெற்ற லோக்பா இடைத்தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ஆகியோர் மாநில அரசில் பங்கு பெற்றதால், அவர்கள் ஏற்கனவே தேர்வான எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதன் காரணமாக காலியாக இருந்த கோரக்பூர், புல்பூர் மக்களவை தொகுதிகளில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றது.  மாஜ்வாதி கட்சி அமோகமாக வெற்றிபெற்றது. இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி உள்ளார் முதல்வர் யோகி.  16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

யோகியின் தொகுதியான  கோரக்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த, ராஜிவ் ராட்டிலா,  தேவிபட்டினம் பகுதி கோட்ட ஆணையராக மாற்றப் பட்டுள்ளார்.

அதுபோல,  பரேலி மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் சமூக வலைதளத்தில், மாநில அரசு குறித்து சர்ச்சையான கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மாநிலம் முழுவதும் 43 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.