உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான டாக்டர் ருச்சிகா டாண்டனிடம் நடைபெற்ற இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரில், “எனது மொபைல் எண்ணுக்கு அழைத்த நபர் தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)ல் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எனது எண்ணில் இருந்து மோசடி அழைப்புகள் வருவதாக மும்பை சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார்கள் வந்திருப்பதாகவும் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்களுக்கு தொல்லை தரும் செய்திகளை அனுப்பியதற்காக எனது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்” என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் ருச்சிகா டாண்டனிடம், ஐ.பி.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து வேறு ஒரு நபருடன் பேச செய்துள்ளனர்.

ருச்சிகா வங்கிக் கணக்கில் பணமோசடி மூலம் ரூ. 7 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் இந்த கணக்கு சட்டவிரோத நடவடிக்கைக்காக முடக்கப்படுவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மோசடி அழைப்புகள் மற்றும் பணமோசடி ஆகிய விவகாரங்களில் ருச்சிகாவின் தொடர்பு இருப்பதை அடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ருச்சிகா டாண்டன், தனக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

https://x.com/PTI_News/status/1823682843584704539

இருந்தபோதும் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட அவர்கள், தங்களை நேரில் சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர். அவர்களை சந்திக்கச் சென்ற ருச்சிகா டாண்டனிடம் சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு நபர் பேசியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் இதுகுறித்து வெளியில் கூறவேண்டாம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இவர்களின் இந்த மிரட்டலை நம்பி ரூ. 2.81 கோடியை இழந்த ருச்சிகா டாண்டன் ஒருவார காலமாக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.

பின்னர் ஒருவழியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து லக்னோ சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.