அயோத்தி: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கின. சிலை வைக்கப்படும் புதிய இடத்தை தேர்வு செய்து அங்கு மார்ச்சில் பூஜை செய்யப்பட்டது.
பின்னர், கட்டுமானப் பணியை தொடங்க ஏதுவாக, சிலை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆக. 5ம் தேதி மதியம் 12.30 மணியளவில் கோவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கி வைக்கிறார்.
பாஜக, விஎச்பி அமைப்பினர் கலந்துகொள்கின்றனர். விழாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி வந்தார்.
ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளுக்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் யோகி ஆதித்யநாத், ராம ஜென்மபூமியிலும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமர் கோவிலை கட்ட அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.