உத்திரப்பிரதேசம்:
உத்திரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
உத்திரப்பிரதேச தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய உயிருக்கு எவ்வித ஆபத்து வந்தாலும் அதற்கு ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பாட்டிதர் தான் காரணம் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபரான இந்திரகாந்தி திருபாதி உத்திரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஹோபாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவர் இம்மாத தொடக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பாட்டிதார் மீது ஊழல், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
மேலும் சுரங்க வெடிபொருட்களை கையாண்டு வந்த இந்திரகாந்த் திருபாதி தான் எந்த விதத்திலாவது உயிரிழந்தால் அதற்கு ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பாட்டிதர் தான் காரணம் என்று தெரிவித்து ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார், அது சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு காரில் இருந்த அவரை திடீரென யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளனர், சுட்டது யார் என்று தெரியவில்லை ஆனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை ஐசியுவில் வைத்து சிகிச்சையளித்து வந்தனர். தொழிலதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பாட்டிதர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்திராகாந்த் திருப்பாதியின் குடும்பத்தினர் ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பாட்டிதர் மீது கொலை மிரட்டல் மற்றும் மிரட்டி பணம் பறிக்க முயன்றார் என்று தெரிவித்து வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் இப்போது வரை தொழிலதிபர் இந்திராகாந்தை சுட்டது யார் என்று தெரியவில்லை. ஐபிஎஸ் அதிகாரியும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
போலீஸ் அதிகாரி மணிலால் பாட்டிதர் கைது செய்யப்பட வேண்டும், அவர் மிகவும் செல்வாக்குமிக்க நபர். ஆனால் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் எங்கள் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று இந்திராகாந்த்தின் சகோதரர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் உத்திரப்பிரதேச அரசையும், முதல்வர் யோகி ஆதித்யாநாத்தையும் கடுமையாக சாடியுள்ளார்