பாரதிய ஜனதா கட்சியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறி ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜக-வுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் க்ஷத்திரியர்களின் தயவை நாடுவதாகவும் மற்ற நேரங்களில் அவர்களை பிரதிநிதித்துவபடுத்தாமல் புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மேற்கு உத்திர பிரதேசத்தில் 10 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இவர்களுக்கு மக்களவையில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், ராஜ்புத், தியாகி மற்றும் சைனி உள்ளிட்ட முக்கிய சாதி அமைப்பினர் ஏப்ரல் 7ம் தேதி டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் சஹாரன்பூரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.

க்ஷத்ரிய சமாஜ் சங்கர்ஷ் சமிதி ஏற்பாடு செய்திருந்த க்ஷத்ரிய ஸ்வாபிமான் என்ற இந்த கூட்டத்திற்கு மேற்கு உ.பி.யில் இருந்து மட்டுமின்றி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11 ஆம் தேதி மீரட்டில் உள்ள சிசௌலியிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி காஜியாபாத்தில் உள்ள தௌலானாவிலும், ஏப்ரல் 16 ஆம் தேதி சர்தானாவின் கெடாவிலும் க்ஷத்ரிய ஸ்வாபிமான் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே குஜராத் மாநிலத்திலும் பாஜக-வுக்கு எதிராக சத்திரிய சமூகம் அதிருப்தியில் உள்ள நிலையில் மேற்கு உ.பி., ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள சத்திரிய சமூகத்தினரும் பாஜக-வுக்கு எதிராக அணி திரண்டிருப்பதை அடுத்து பாஜக பீதியில் உறைந்துபோயுள்ளது.

இதனையடுத்து இந்த சமூக தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருந்தபோதும் பாஜக மீதான அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.