உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆகஸ்ட் 17ம் தேதி இதுகுறித்து அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சொத்து விவரங்களை பதிவிடாத அரசு ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

மாநிலத்தில் மொத்தமுள்ள 8,46,640 அரசு ஊழியர்களில் 15 சதவீதம் அதாவது 1,31,748 பேர் மட்டுமே ஆகஸ்ட் 17ம் தேதி வரை இந்த விவரங்களை அளித்திருந்த நிலையில் தலைமைச் செயலாளரின் இந்த சுற்றறிக்கையைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் 6,02,075 பேர் அதாவது 71 சதவீத அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை ‘மனவ் சம்பதா’ இணையதளத்தில் பதிவேற்றினர்.

இருந்தபோதும், இந்த விவரங்களை பதிவிடாத சுமார் 2.44 லட்சம் அரசு ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜவுளி, எரிசக்தி, விளையாட்டு, வேளாண்மை மற்றும் மகளிர் நலத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், கல்வித் துறை ஊழியர்கள் தங்கள் சொத்துக்களை மறைப்பதில் முன்னணியில் உள்ளனர் என்றும் அடிப்படைக் கல்வி, உயர்கல்வி, மருத்துவ சுகாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கள் விவரங்களை வழங்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள் மற்றும் காவலர் ஆட்சேர்ப்பு தேர்வு காரணமாக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் விவரங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அம்மாநில காவல்துறை தலைமை அலுவலகம் கோரிக்கை வைத்தது.

உள்துறையின் இந்த கோரிக்கையை அடுத்து சொத்து விவரங்களை சமர்பிக்காத மீதமுள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் தங்கள் விவரங்களை வழங்க உ.பி. மாநில பணி நியமனத் துறை அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த ஒரு மாத அவகாசத்தை பயன்படுத்தி சொத்து விவரங்களை பதிவேற்றும் அரசு ஊழியர்கள் கால தாமதத்திற்கான உரிய காரணத்தை கூறி பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.