லக்னோ:

த்தரபிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கடுமையான ஷரத்துக்கள் அடங்கிய புதிய சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ள நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

உ.பி.யில் பாஜக ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து  பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமூக விரோதிகளும் பயமின்றி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை  தடுக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை உத்தரபிரதேச மேலவையின் ஒப்புதலுக்காக  தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டன.

இந்நிலையில், இந்த மசோதா நேற்று மாநில சட்டப்பேரவையில்  மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய எதிர்க்கட்சி  உறுப்பினர்கள், இது கருப்பு சட்டம் என்றும், எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கவே பயன்படுத்தப்படும் எனவும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் பயங்கரவாதத்தை  தூண்டுவோர் மற்றும்  ஆதரிப்போருக்கு எதிராக மட்டுமே இந்த சட்டம் பயன்படுத்தப்படும், அதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சியினர்,  அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து சபையில் இருந்த வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து சபாநாயகர்  குரல் வாக்கெடுப்பு நடத்தி, சட்டத்தை நிறைவேற்றினார்.