பிரக்யராஜ்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முன்னாள் பிரதமர் மறைந்த இந்திராகாந்தி பிறந்த வீடான ஆனந்த பவன் வீடு, பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை என்றும், இதன் காரணமாக ரூ. ரூ. 4.35 கோடி வரி பாக்கி உள்ளதாகவும், அதை உடனே செலுத்த வேண்டும் என்றும் பிரக்யராஜ் நகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
நாட்டின் 3வது பிரதமரும், இரும்பு பெண்மணியுமான மறைந்த இந்திரா காந்தி உ.பி. மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் பிறந்தார். அவர் பிறந்த வீடு ஆனந்த பவன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டை, தற்போது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை பராமரித்து வருகிறது.
ஆனந்தபவன் வீடு சார்பாக கடந்த சில ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தவில்லை என்று கூறி, பிரக்யராஜ் நகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி ரூ. 4.35 கோடி வரி நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய பிரக்யராஜ் நகராட்சி கமிஷனர், ஆனந்தபவன் வீட்டுக்கு வரி செலுத்தப்படாத நிலையில், அதுகுறித்து மதிப்பீடு செய்து அறிக்கை அளித்தோம். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்தவொரு பதிலும் வராததால் வரி நிர்ணயம் இறுதி செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
குடியிருப்பு அல்லாத என்ற வகைப்படுத்தலின் கீழ் 2013ம் ஆண்டு முதல் ஆனந்த பவன் வீட்டுக்கு சொத்து வரி செலுத்தப்படவில்லை என்பதால் நகராட்சி நிர்வாக சட்டத்தின் கீழ் ஆனந்த் பவனுக்கு 4.35 கோடி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷ்னர் அலுவலகத்தின் தலைமை வரி மதிப்பீட்டு அதிகாரி பி.கே. மிஸ்தா தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸ் குறித்து கூறிய முன்னாள் மேயர் சவுத்ரி ஜிதேந்திரநாத் சிங், “ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையானது அனைத்து விதமான வரிகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளதால் ஆனந்த் பவனுக்கு வரி விதிக்க முடியாது. இது ஒரு தவறான வரி விதிப்பு ஆகும். சுதந்திர போராட்டத்தின் நினைவுச்சின்னம், அருங்காட்சியகம் மற்றும் கல்வி மையம் என்று அவர் கூறினார்.