கான்பூர்
கான்பூரில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற காவல்துறையினரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகர் அருகே பிக்ரு என்னும் ஒரு சிற்றூர் உள்ளது இங்குள்ள விகாஸ் துபே என்னும் ரவுடி தனது ஆட்களுடன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இவனைப் பிடிக்க டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஒரு காவல்துறை குழு தேடுதல் வேடையில் ஈடுபட்டு வந்தது.
காவல்துறையினருக்கு ரவுடி விகாஸ் துபே பதுங்கி உள்ள இடம் குறித்து ரகசியத் தகவல் கிடைத்துள்ளது, அங்கு தேவேந்திர மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் சென்றுள்ளனர். காவல்துறையினருக்கும் ரவுட்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் மேலும் பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க அம்மாநில டிஜிபிக்கு உத்தரவு இட்டுள்ளார்.
ரவுடி கும்பல் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவல்துறையினரைச் சுட்டு வீழ்த்தி உள்ளது உத்தரப்பிரதேச மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும்,.