உன்னாவ்
உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் அடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில் மூன்று தலித் சிறுமிகள் மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்களைக் காணவில்லை. மக்கள் தேடிய போது மூவரும் மயங்கிய நிலையில் வயலில் கிடந்தனர். இதையொட்டி மருத்துவமனைக்கு அவர்களை எடுத்துச் சென்ற போது ஒரு சிறுமி வழியிலேயே இறந்து விட்டார்.
மீதமுள்ள இருவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ஒரு சிறுமி கவலைக்கிடமாக உள்ளார். இறந்த இருவரின் பிரேதப் பரிசோதனையில் அவர்கள் விஷம் அருந்தி மரணம் அடைந்தது தெரிய வந்தது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதற்காக 6 தனிப்படைகள் வெளியாகின. இது தொடர்பாக ஒரு சிறுவன் மற்றும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர் வினய் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி சிறுமிகள் மாடு மேய்க்க வயல் வெளிக்கு வரும்போது அவர் சிறுமிகளுடன் பேசி பழகி வந்துள்ளார். வினய் ஒரு பெண் மீது காதல் கொண்டு அதைத் தெரிவித்த போது பெண் அதை மறுத்துள்ளார். மேலும் அந்த பெண் தனது தொலைப்பேசி எண்ணை அளிக்கவும் மறுத்துள்ளார். காதலை ஏற்க மறுத்த பெண் மீது வினய் ஆத்திரம் கொண்டுள்ளார்.
அந்த 3 சிறுமிகளும் வயல்வெளிக்கு வந்த போது வினய் அங்கு வந்துள்ளார். வினய் காதலித்த சிறுமிக்குத் தாகம் எடுத்ததால் தண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு வினய் பூச்சி மருந்து கொடுத்த நீரை குடிக்கக் கொடுத்துள்ளார். மற்ற சிறுமிகளும் அந்த நீரைக் குடித்துள்ளனர். அதை வினய் தடுக்க முயன்றும் அதற்குள் அவர்கள் குடித்துள்ளனர்.
மூவரும் மயக்கம் அடைந்ததால் பயந்து ஓடிப்போன வினய் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூச்சி மருந்து கலக்க அவருக்கு உதவி செய்த சிறுவனும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.